விழுப்புரம் அருகே கடனை திருப்பி கேட்ட விவசாயி அடித்துக்கொலை ரவுடி வெறிச்செயல்
விழுப்புரம் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட விவசாயியை அடித்துக்கொன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
வளவனூர்,
விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரஜித்(வயது 65). விவசாயி. இவருடைய மகன் ஆனந்த் (40). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகனும், பிரபல ரவுடியுமான மகேஷ் என்கிற மகேஷ்வரனிடம்(43) ஒரு பவுன் நகை, ரூ.3 லட்சத்தை கடனாக கொடுத்திருந்தார்.
பின்னர் அந்த தொகையை பலமுறை திருப்பி கேட்டும் மகேஷ்வரன் கொடுக்கவில்லை. அதன்பின்னர் ஆனந்த் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்தார்.
கல்லால் அடித்துக்கொலை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், மகேஷ்வரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் இந்திரஜித் அப்பகுதியில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்வரனிடம் இந்திரஜித் தனது மகன் கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்வரன் அருகில் கிடந்த சிமெண்டு கல்லால், இந்திரஜித்தை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்திரஜித்தின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவுடி கைது
இது குறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மகேஷ்வரன் மீது வளவனூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கொடுத்த கடனை திருப்பி கேட்ட விவசாயியை கல்லால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.