மதுபோதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
மதுபோதையில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), விவசாயி. கடந்த 20-ந் தேதி காலை 9 மணியளவில் இவர்களது கடலை வயலுக்கு கணேசனின் தம்பி சேட்டு மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா ஆகியோர் பூச்சி மருந்து அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த கணேசன் பூச்சி மருந்தை மது என கருதி குடித்து உள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.