காதலியை குத்திக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை


காதலியை குத்திக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை
x

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுக்கோட்டை

காதலி குத்திக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சூரக்காடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன் (39). விவசாயி. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதுகுறித்து மோகனிடம், மகாலட்சுமி கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி மகாலட்சுமி தனது வீட்டிற்கு மோகனை அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த மோகன் மகாலட்சுமியை கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து மோகனை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா இன்று தீர்ப்பு கூறினார். அதில், கொலை செய்த குற்றத்திற்காக மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story