காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்


தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் காட்டுப்பன்றி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்து வந்தவர் மேரி (வயது 60). இவர் நேற்று மதியம் குப்பைகளை கொட்டுவதற்காக சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது குப்பை தொட்டிக்கு அருகில் நின்றுருந்த காட்டுப்பன்றி மேரியை முட்டி கீழே தள்ளிவிட்டு ஓடியது. இதில் மேரி பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், மேரியை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதுடன், வனத்துறை சார்பில் ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். தொடர்ந்து வனவிலங்குகள் தாக்குதல் சம்பவம் நடந்து வருவதால், எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story