மோட்டார் சைக்கிள் மோதி நிதிநிறுவன அதிபர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி நிதிநிறுவன அதிபர் பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குமார் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் குளித்தலை பெரியபாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. ஆனால் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் அந்த இடத்தில் இருந்து தப்பி சென்று உள்ளார். இதையடுத்து படுகாயம் அடைந்த குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் குமார் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது மோட்டார் சைக்கிள் பதிவு எண் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.