சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு ரூ.7,500 அபராதம்


சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி கடைக்கு ரூ.7,500 அபராதம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:47 PM GMT)

வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்ததால் சம்பந்தப்பட்ட டயர் கடைக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

வாங்கிய 53 நாட்களில் டயர் வெடித்ததால் சம்பந்தப்பட்ட டயர் கடைக்கு ரூ.7,500 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

டயர் கடை

குமரி மாவட்டம் கல்பாடியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு டயர் கடையில் ரூ.1,060 மதிப்புள்ள இருசக்கர வாகனத்திற்கான டயர் ஒன்று வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய 53 நாட்களிலேயே இந்த டயர் வெடித்து சேதமடைந்தது. தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருவருக்கும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே, புதிய டயர் மாற்றித் தருமாறும், ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு தருமாறும் கடைக்காரரிடம் கண்ணன் கேட்டுள்ளார். ஆனால் டயர் கடைக்காரர் மறுத்து விட்டார். உடனே வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட கடைக்கு கண்ணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கண்ணன் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் விசாரித்தனர்.

அபராதம்

இதைத் தொடர்ந்து டயர் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட கண்ணன், டயருக்கு ஏற்கனவே செலுத்திய ரூ.1,060-ஐ கொடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் ரூ.7,500 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.11,060-ஐ ஒரு மாத காலத்திற்குள் கண்ணனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story