வணிக நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
வணிக நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கழிவுநீரை பாதாளசாக்கடை இணைப்பில் விடாமல் வெளியில் விட்ட வணிக நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனியார் நிறுவனத்துக்கு அபராதம்
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கீழவாசல் பாம்பாட்டி தெருவில் இயங்கி வரும் தனியார் மின்பொருள் வணிக நிறுவனத்தில் கழிவுநீரை பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் பொது இடத்தில் விடுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது தனியார் நிறுவனம் கழிவுநீரை பாதாள சாக்கடை இணைப்பு இல்லமல் திறந்த மழைநீர் வடிகாலில் விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தனியார் நிறுவனத்திற்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் நோட்டீசு வழங்கப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடும் நடவடிக்கை
மேலும் இதுபோல பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு விளைக்கும்படி பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் கழிவுநீரை வெளியேற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர்களின் மீது பொது சுகாதார சட்டபடி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 14 கோட்டங்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கழிவுநீரை பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் வெளியில் விடும் நிறுவனங்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.