தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தனியார் நிதி நிறுவனம்

குருந்தன்கோடு அருகே உள்ள புல்லுவிளையை சேர்ந்தவர் செல்வகீதா. இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் சேர்ந்திருந்தார். திட்ட முடிவில் முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம் திரும்ப கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 64 தவணைகளில் ரூ.64 ஆயிரம் செலுத்தி முடித்து விட்டு முதிர்வுத் தொகையான ரூ.94 ஆயிரத்தை தனியார் நிறுவனத்திடம் கேட்டார்.

அதற்கு அந்த நிறுவனம் ரூ.94 ஆயிரத்துக்கான காசோலை கொடுத்தது. ஆனால் தனியார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கு செயல்பாட்டில் இல்லாததால் இந்த காசோலை மூலம் பணம் பெற முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட செல்வகீதா வக்கீல் மூலம் தனியார் நிதி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

ஆனால் உரிய பதில் கிடைக்காததால் செல்வகீதா, குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட செல்வகீதாவிற்கு வழங்க வேண்டிய முதிர்வு தொகை ரூ.94 ஆயிரம், அபராத தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story