வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

விசாரணை அறிக்கை கேட்டவரை 4 ஆண்டுகளாக அலைக்கழித்ததாக குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

விசாரணை அறிக்கை கேட்டவரை 4 ஆண்டுகளாக அலைக்கழித்ததாக குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரப்பர்மரத்தடிகள் பறிமுதல்

பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் டேவிட்தாஸ். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக வனத்துறைக்கும், டேவிட் தாசுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக நீதி மன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் டேவிட் தாசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு குறிப்பிட்ட அந்த நிலத்தில் நடப்பட்டிருந்த முதிர்ந்த ரப்பர் மரங்களை டேவிட் தாஸ் வெட்டி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வனத்துறையினர் லாரியுடன் ரப்பர் மரத்தடிகளையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணை அறிக்கை

அதைத்தொடர்ந்து தனக்கு சொந்தமான ரப்பர் மரத்தடிகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டேவிட் தாஸ் வனத்துறை முதன்மை செயலாளருக்கு புகார் அளித்தார்.

அந்த புகார் தொடர்பாக கடந்த 2019 -ம் ஆண்டு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டேவிட் தாசுக்கு வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலைக் கேட்டு டேவிட்தாஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குமரி மாவட்ட வனத்துறை பொது தகவல் அதிகாரிக்கு அனுப்பினார்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இதில் அவருக்கு முறையான தகவல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் டேவிட்தாஸ் மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த ஆணையம் புகார் தாரரான டேவிட் தாசுக்கு உரிய தகவல் வழங்க 2021 -ம் ஆண்டு ஆகஸ்டு 8 -ந் தேதி உத்தரவிட்டார். அதற்கும் வனத்துறை பொதுத்தகவல் அதிகாரி சம்பந்தமில்லாத தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே டேவிட் தாஸ் மீண்டும் ஆணையத்தை அணுகினார்.

அதைத்தொடர்ந்து வன அதிகாரியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தகவல் ஆணையம் குமரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பணி புரிந்த பொது தகவல் அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. இந்த தொகை குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியிடமிருந்து வசூலித்து வரைவோலையாக (டி.டி.) டேவிட் தாசுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. அப்போது விசாரணை அறிக்கையின் நகலும் ஒப்படைக்கப்பட்டது.


Next Story