வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
கல்லிடைக்குறிச்சியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கியவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவைச் சேர்ந்தவர் பக்கிரி மனைவி காந்திமதி. கடந்த 2013-ம் ஆண்டில் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் மனைவி மயில அம்மாள் மகன் செல்வராஜ், செல்வராஜின் மனைவி பியூலா ஆகியோர் ஒரு கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீட்டில் இருந்த காந்திமதி மீது அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்து தாக்கினர். இதுகுறித்து காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவியல் நடுவர் பல்கலை செல்வன் விசாரித்து காந்திமதியை ஆயுதத்தால் தாக்கிய செல்வராஜிக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் 15 நாள் சிறை தண்டனை விதித்தும், அவரது மனைவி மற்றும் தாயாரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.