பட்டாணி கடையில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
பட்டாணி கடையில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
தஞ்சையில் பட்டாணி மொத்த விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் கடலை வறுக்கும் எந்திரமும் சேதம் அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டாணி கடை
தஞ்சை கீழவாசல் பகுதியில் பட்டாணி மொத்த விற்பனை கடை நடத்தி வருபவர் காமராஜ். இந்த கடையில் பட்டாணி, கடலை மிட்டாய், காராச்சேவு உள்ளிட்ட தின்பண்டங்களும் விற்பனை செய்து வருகிறார்.
தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் இங்கு வந்து தின்பண்டங்களை வாங்கிச்சென்று விற்பனை செய்வது வழக்கம். தினமும் இரவு விற்பனை முடிந்து கடையை காமராஜ் பூட்டி விட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தீ விபத்து
நேற்று காலை 6 மணிக்கு கடையில் இருந்து புகை வெளியே வந்தது. இதனைபார்த்த அக்கம், பக்கத்தினர் காமராஜூக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கடைக்கு வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த கடலை மிட்டாய், பட்டாணி, நிலக்கடலை உள்ளிட்ட தின்பண்டங்கள், மேஜை, நாற்காலி, பேட்டரி உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது.
ரூ.5 லட்சம் சேதம்
இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.