லாரி அதிபர் வீட்டில் தீ விபத்து
லாரி அதிபர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேல கொண்டையம் பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 46). லாரி அதிபரான இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் தனது மனைவி குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மருதமுத்து வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைபார்த்த பக்கத்து வீட்டினர் தூங்கி கொண்டிருந்த மருதமுத்துவுக்கு போன்மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினரை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்துஅணைத்தனர். எனினும் இந்த தீவிபத்தில் மின் ஒயர்கள், சுவிட்ச் பாக்ஸ், பீரோவில் இருந்த துணிகள் எரிந்து நாசமாயின. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.