சென்னை வேளச்சேரியில் 9 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி அணைத்தனர்


சென்னை வேளச்சேரியில் 9 அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து - 3 மணி நேரம் போராடி அணைத்தனர்
x

சென்னை வேளச்சேரியில் 9 அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை

சென்னை வேளச்சேரி விஜயநகர் பிரதான சாலையில் புதியதாக 9 அடுக்குமாடிகள் கொண்ட நட்சத்திர ஓட்டல் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் மரங்களை கொண்டு உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் 10-க்கும் மேற்பட்ட வடமாநில தச்சுதொழிலாளிகள் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 5 மணியளவில் திடீரென 9 அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் புகை மூட்டம் பரவியது. மேலும் கட்டிடத்தில் இருந்து அதிகளவில் கரும்புகை மூட்டம் வெளியேறியது. இதை கண்டதும் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளிகள் கட்டிடத்தில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் கட்டிடத்தில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த கரும் புகையால் அந்த பகுதியை கடந்து செல்லவே சிரமப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார், அப்பகுதியில் வாகனங்கள் செல்லாமல் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி, திருவான்மியூர், மேடவாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் முன்பகுதியில் கண்ணாடி தடுப்புகள் இருந்ததால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் இருக்க அந்த கண்ணாடியை கற்களை வீசி உடைத்து அந்த வழியாக நீரை பீய்ச்சி அடித்தனர்.

ஒரு பகுதியில் தீயை அணைத்தாலும் மற்றொரு பகுதியில் இருந்து தீ வந்ததால் அங்கும் தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் 8-வது மாடியில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்ட 2 வடமாநில தொழிலாளிகள் கீழே இறங்கி வரமுடியாமல் சிக்கி இருப்பதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு 2 பேரையும் மொட்டை மாடிக்கு வரும்படி கூறினர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் 'ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம் மொட்டை மாடியில் இருந்து 2 தொழிலாளிகளையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.

இந்த கட்டிடத்தின் அருகே பெரிய வணிக வளாகம், துணி கடைகள் உள்ளதால் தீ பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது பற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உள்கட்டமைப்பு பணிகள் செய்தபோது ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்தது.

முதல் தளத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட மரங்கள் உள்பட பல பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story