வங்கியில் திடீர் தீ விபத்து
கீழ்பென்னாத்தூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கம்ப்யூட்டர், பதிவேடுகள் எரிந்து நாசமாயின.
கீழ்பென்னாத்தூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கம்ப்யூட்டர், பதிவேடுகள் எரிந்து நாசமாயின.
வங்கியில் தீ விபத்து
கீழ்பென்னாத்தூர்-கருங்காலிகுப்பம் செல்லும் சாலையில் ஏ.டி.எம். வசதியுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலையில் வங்கி நேரம் முடிந்ததும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் வங்கியில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும், வங்கி மேலாளருக்கும் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே வங்கியில் புகை பிடித்த இடத்தில் தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் மதியழகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து வங்கியில் பிடித்த தீயை அணைத்தனர்.
கம்ப்யூட்டர் எரிந்து நாசம்
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் காசாளர் பகுதிக்கு முன்புறம் தரையில் வைத்திருந்த பழைய பதிவேடுகள் மற்றும் வங்கியில் உபயோகிக்கப்பட்ட சலான்கள் கருகின. மேலும் கவுண்ட்டர் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வங்கி மேலாளர் லட்சுமி நரசிம்ம மூர்த்தி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. உரிய நேரத்தில் தீ பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின.
மாற்று ஏற்பாடு
தீ விபத்து காரணமாக நேற்று வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.