அரசு உண்டு உறைவிட பள்ளியில் திடீர் தீ விபத்து
கல்வராயன்மலை தாழ்மொழிப்பட்டு அரசு உண்டு உறைவிட பள்ளியில் திடீர் தீ விபத்து
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை வெள்ளிமலை அருகே உள்ள தாழ்மொழிப்பட்டு கிராமத்தில் அரசு உண்டு உறைவிட ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 28 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளி சமையல் அறையில் இருந்து புகைமூட்டம் வெளியேறியது. இதைப்பார்த்த ஊர் பொதுமக்கள் பள்ளி அருகே சென்று பார்த்தபோது சமையலறை தீப்பிடித்து எரிந்தது. உடனே அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பள்ளியில் குறைந்த அளவு மாணவர்களே படித்து வருகிறார்கள். ஆனால் அதிகமான மாணவர்கள் தங்கி படித்து வருவதாக கூறி சமையலா் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் ஏமாற்றி வருவதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளியில் தங்க விடாமல் வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும், வேலை நாட்களில் தலைமை ஆசிரியர் சரியாக பள்ளிக்கு வருவது இல்லை என குற்றம் சாட்டினர். கவனகுறைவாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.