கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து-4½ மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது
கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 4½ மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 4½ மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.
தொழிற்சாலையில் தீ விபத்து
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் கோவை -பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிராஜ் (வயது 62) என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் 2 கட்டிடங்கள் உள்ளன. இதில் முன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் மெத்தைகள் தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்பக்க பகுதியில் உள்ள கட்டிடத்தில் மெத்தை தயாரிக்க தேவையான பஞ்சு, ஆயில் மற்றும் மூலப் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளது. மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீப்பிடித்தது.
வெடி சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
தீப்பிடிக்க தொடங்கிய சில நிமிடங்களில் அறையில் வைக்கப்பட்டிருந்த ஆயில் கேன்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். தீ விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த ஆயில் மற்றும் பஞ்சு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அனைத்திலும் தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அதிகாலையில் கோவை -பொள்ளாச்சிக்கு வாகன சென்ற பயணிகள் அச்சமடைந்தனர்.
உடனடியாக பொதுமக்கள் இதுபற்றி கிணத்துக்கடவு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் அழகர்சாமி, கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ் தலைமையில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை தெற்கு ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டு 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
4½ மணி நேரம்
ஆனாலும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பின்பக்க கட்டிடத்தின் மேல் தகர சீட்டுகள் மற்றும் மெத்தை தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பஞ்சு மற்றும் ஆயில் பேரல்கள், ஒரு சரக்கு வேன், எந்திரங்கள் முழுவதுமாக தீயில் கருகி நாசமானது. சுமார் 4½ மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக போராடி அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.