ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தீவிபத்து
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தீவிபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
கோவை வெறைட்டிஹால்ரோடு சுந்தர விநாயகர் கோவில் வீதி யை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). ஓட்டல் உரிமையாளர். சம்பவத்தன்று இவர் வீட்டின் பூஜை அறையில் விளக்கு பற்ற வைத்தார்.
பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகளை டியூசன் சென்டரில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். அப்போது அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதை கணேசன் வீட்டிற்கு விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ கட்டுக்குள் வர வில்லை.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து கருகி நாசமானது.
அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.