வேனில் கொழுந்து விட்டு எரிந்த தீ
கரூர்-கோவை சாலையில் வேனில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கரூரில் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தில் கரூரைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய ஆம்னி வேனை பழுது நீக்குவதற்காக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பழுது நீக்கும் ஊழியர் அந்த வேனை எடுத்து கொண்டு கரூர்-கோவை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட்டார். பின்னர் வேனை மீண்டும் நிறுவனத்திற்கு ஊழியர் எடுத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேனின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் வேகமாக கீழே இறங்கி உயிர் தப்பினார். அதற்குள் வேன் முழுவதும் தீப்பற்றி நடுரோட்டில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
பரபரப்பு
இதைக்கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது.
இந்தசம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.