தோட்டத்தில் தீ விபத்து; 5 ஆயிரம் வாழைகள் சேதம்

திசையன்விளை அருகே தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.
திசையன்விளை:
திசையன்விளை அருகே தலைவன்விளையைச் சேர்ந்தவர் கதிரேசன். விவசாயியான இவர் திசையன்விளை அருகே சொக்கலிங்கபுரத்தில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் வாழை பயிரிட்டு இருந்தார். தற்போது பெரும்பாலான வாழை மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வாைழ தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்குள்ள காய்ந்த புற்களில் தீப்பிடித்து மளமளவென்று தோட்டம் முழுவதும் பரவியது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 5 ஆயிரம் சக்கை ரக வாழைகள் மற்றும் சொட்டுநீர் பாசன குழாய்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. பலத்த காற்றில் உயரழுத்த மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி விழுந்து தோட்டத்தில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






