மூங்கில்துறைப்பட்டுக்கு தேவை தீயணைப்பு நிலையம்
மூங்கில்துறைப்பட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோாிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மூங்கில்துறைப்பட்டு. மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள, இந்த பகுதியை மையமாக கொண்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
அடிக்கடி நிகழும் தீ விபத்து
இப்பகுதி பொதுமக்களின் பிரதான தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் கரும்பு சாகுபடி செய்கிறார்கள். இதை தவிர்த்து நெல், கேழ்வரகு, மரவள்ளி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பிற பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறார்கள்.
பெரும்பாலும் கிராமங்களே நிறைந்த பகுதியாக இருப்பதால், இங்கு குடிசை வீடுகள் தான் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் தீ விபத்துக்கள் நேர்ந்தால், உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் சேதங்களும் அதிகமாக ஏற்படுகிறது.
தீ விபத்து நேர்ந்தால், 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சங்கராபுரம் பகுதி அல்லது 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலை, 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட தண்டராம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டி இருக்கிறது.
தீயணைப்பு துறையின் மூலம் மக்களுக்கு உடனடி அவசர சேவைகள் என்ற அடிப்படையில் தீ விபத்து ஏற்படும்போது தீ பரவுவதை தடுத்து மக்களை காப்பாற்றி தீயை அணைப்பது பிரதான சேவை ஆகும். இதுதவிர மழைக்காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிணற்றில் விழுந்து தவிக்கும் போது அதனை மீட்பது, வீட்டிற்குள் புகுந்த பாம்புகளை பிடிப்பது என பல்வேறு சேவைகள் மக்களுக்கு தீயணைப்புத் துறையின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
அறிவிப்போடு இருக்கிறது
இதுபோன்ற இடர்களின் போது, மேற்கூறிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு வருவதற்குள், வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி மக்கள் நிர்கதியாகும் நிலை தான் ஏற்படுகிறது.
இதை தடுக்க மூங்கில்துறைப்பட்டு பகுதியை மையமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அரசு ஏனோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
பணிகள் தொடங்கவில்லை
இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் கூறுகையில்,
இந்த பகுதியில் அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளன. மேலும் கரும்பும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தீவிபத்து போன்ற எதிர்பாரத விபத்துக்கள் நேர்ந்தால் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தடைவதற்குள் முழுவதும் எரிந்து சேதமாகிவிடுகிறது.
இதனால், மூங்கில்துறைப்பட்டை மைய்யமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என்றார்.
பழையூர் பகுதி முத்து கூறியதாவது:-
மூங்கில்துறைப்பட்டு பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. கோடைகாலத்தில் அடிக்கடி வயல்வெளிகளில் தீ பிடித்து பயிர் சேதம் ஏற்படுகிறது.
இதேபோல் மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் வருவதும், கால்நடைகள் கிணற்றுக்குள் விழும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. மீட்பு பணிக்கு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பெரும்அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது.
இதனால் இழப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை சரிசெய்ய மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இடத்தை தேர்வு செய்து உடனடியாக தீயணைப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என்றார்.