குன்றத்தூரில் குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீ; புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
குன்றத்தூரில் உள்ள குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
குப்பை கிடங்கில் தீ
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலைஓரம் குன்றத்தூர் அருகே குன்றத்தூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் டன் கணக்கில் மலை போல் குவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள குப்பைகளை தரம் பிரித்து குப்பைகளை தனியாகவும் அதில் சேர்ந்துள்ள மண்ணை தனியாகவும் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணி எதுவும் நடைபெற வில்லை இந்த நிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென வேகமாக பரவியது. மலைபோல் குவித்து வைத்துள்ள குப்பை கிடங்கில் தீயானது வேகமாக பரவியதால் கொழுந்துவிட்டு எரிந்தது.
புகை மூட்டம்
விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் தாமோதரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாலை 5 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
அடிக்கடி இந்த குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்குள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.