கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் போட்டிபோட்டு மீன்பிடித்த மக்களால் களைகட்டிய மீன்பிடி திருவிழா


கொட்டாம்பட்டி அருகே கண்மாயில் போட்டிபோட்டு மீன்பிடித்த மக்களால் மீன்பிடி திருவிழா களைகட்டியது.

மதுரை

கொட்டாம்பட்டி,


மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்வத்தான்பட்டியில், அய்வத்தான் கண்மாய் பல ஆண்டுகளுக்கு பிறகு பருவமழையால் கடந்த ஆண்டு நிரம்பியது. தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. எனவே பாரம்பரியமாக நடத்தப்படும் மீன்பிடி திருவிழா நேற்று அய்வத்தான் கண்மாயில் நடந்தது.

இதுகுறித்து ஏற்கனவே அக்கம்பக்கத்து கிராமங்களில் ஒலி பெருக்கி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அதிகாலையிலேயே கண்மாய்க்கு வந்தடைந்தனர். அங்குள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கண்மாய் கரையில் நின்று வெள்ளை வீசியதை தொடர்ந்து பொதுமக்கள் மீன்பிடி உபகரணங்களான கச்சா, வலை, ஊத்தா கூடை உள்ளிட்டவைகளை கொண்டு கண்மாய்க்குள் இறங்கினர். நாட்டுவகை மீன்களான கட்லா, சிலேபி, ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகம் அடைந்தனர். ேபாட்டிபோட்டு மீன்பிடித்தவர்களால் விழா களைகட்டியது.

மீன்குழம்பு கமகமத்தது

இந்த மீன்களை யாரும் விற்கமாட்டார்கள். அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து இறைவனுக்கு படைத்த பின்னர் சாப்பிடுவார்கள். அந்த வகையில் அய்வத்தான்பட்டியிலும், அக்கம்பக்கத்து கிராமங்களிலும் வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது. இதுபோன்று மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஆண்டுதோறும் நல்லமழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். கண்மாயில் மீன்பிடித்தபோது ஒரு பெண்ணின் வலையில் பாம்பு சிக்கியது. அந்த பாம்பை அகற்ற முடியாமல் சிரமப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.


Next Story