சேர்வாரி வாய்க்கால் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்
திருக்கடையூர் அருகே சேர்வாரி வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கடையூர்;
திருக்கடையூர் அருகே சேர்வாரி வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேர்வாரி வாய்க்கால்
திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி, நட்சத்திர மாலை வழியாக சேர்வாரி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை நம்பி நட்சத்திர மாலை, டி.மணல்மேடு, சரபோஜி ராஜபுரம், சீவக சிந்தாமணி, காடுவெட்டி, ராவணன் கோட்டகம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில் விவசாயப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்த வாய்க்காலில் இறங்கி செல்லும் நிலை உள்ளது. மேலும் சாகுபடி காலங்களில் சாலையில் இருந்து தங்கள் வயல்களுக்கு விவசாய பணிகளுக்கு தேவையான உழவு எந்திரங்கள், அறுவடை எந்திரம் உள்ளிட்டவைகளை இந்த வாய்க்காலின் வழியே பெரும் சிரமத்துடன் எடுத்து செல்கின்றனர்.
தரைப்பாலம்
குறிப்பாக விவசாய இடுபொருட்களை இந்த வாய்க்கலை கடந்து எடுத்து செல்வதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பா சாகுபடி தொடங்கும் முன் சேர்வாரி வாய்க்காலில் தரைப்பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவதுசேர்வாரி வாய்க்காலை நம்பி இந்த பகுதியில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். சாலையில் இருந்து வயலுக்கு செல்ல வாய்க்காலில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இடுபொருட்கள் எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.குறிப்பாக வேளாண் எந்திரங்கள் கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே விவசாயிகளின் நலன்கருதி இந்த வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விரைவில் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.