முதுமலையில் வனத்துறை வாகனத்தை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு
முதுமலையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை ஒன்று திடீரென விரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
முதுமலையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற வனத்துறை வாகனத்தை காட்டு யானை ஒன்று திடீரென விரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் குளிர்ந்த கால நிலையை அனுபவிக்கவும், வனத்தில் உள்ள பசுமை மற்றும் வன விலங்குகளின் அழகை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதனால் காலை, மாலை என 2 வேளையிலும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் காண வனத்துறையினர் வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். அப்போது காட்டு யானை, மான்கள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளையும், அரிய வகை பறவைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.
வாகனத்தை விரட்டிய யானை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வனத்துறை வாகனத்தில் 15 -க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வனத்தில் இருந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் கண்டனர்.
இதனால் சற்று தொலைவில் வாகனத்தை வன ஊழியர்கள் நிறுத்தினர்.
இதைக்கண்ட காட்டு யானை திடீரென சுற்றுலாப் பயணிகள் இருந்த வாகனத்தை தாக்க ஓடி வந்தது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதைக் கண்ட வன ஊழியர்களும் வாகனத்தை வேகமாக ஓட்ட தொடங்கினர். தொடர்ந்து காட்டு யானை சிறிது தூரம் ஓடி வந்தது. பின்னர் வந்த வழியாக திரும்பி சென்றது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.