பற்றி எரிந்த காட்டுத்தீ; செடி, கொடிகள் எரிந்து நாசம்


பற்றி எரிந்த காட்டுத்தீ; செடி, கொடிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் செடி, கொடிகள் எரிந்து நாசமானது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் செடி, கொடிகள் எரிந்து நாசமானது.

காட்டுத்தீ

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை வனச்சரகத்தில் அக்காமலை புல்மேடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி தேசிய பூங்காவாக விளங்குகிறது. இந்த வனப்பகுதி 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 513 மீட்டர் உயரத்தில் உள்ளது. அங்கு தணக்குமலை, அக்காமலை, புதுமலை, கல்லார் மலை, ஊசிமலை ஆகிய வனப்பகுதிகள் உள்ளன.

அக்காமலை புல்மேடு வனப்பகுதியை கேரளா மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ பூக்கும் வனப்பகுதியாகவும் உள்ளது. தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வால்பாறை பகுதியில் கடும் வெயில் வாட்டி வருவதால், வனப்பகுதிகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் உடுமலை வனச்சரக பகுதியை ஒட்டிய அக்காமலை புல்மேடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது.

புகை மண்டலம்

தொடர்ந்து வால்பாறை வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதிக்கும் தீ பரவியது. காய்ந்து கிடக்கும் செடி, கொடி, புற்கள், மரங்களும் தீ பரவி பற்றி எரிய தொடங்கியது. நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் உத்தரவின் பேரில், வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அக்காமலை புல்மேடு பகுதிக்கு சென்று காட்டுத்தீ பரவுவதை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கடுமையான வெயில் காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது.

காட்டுத்தீயால் வனப்பகுதியில் உள்ள புல், சிறு மரம், செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி விட்டன. காட்டுத்தீ காரணமாக சின்னக்கல்லார், சிங்கோனா, முடீஸ், பன்னிமேடு, கேரள எல்லைப் பகுதி வரை புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. வனத்துறையினர் இரவு, பகலாக காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story