ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலி சிறையில் அடைப்பு


ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலி சிறையில் அடைப்பு
x

ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியரை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஆஸ்பத்திரி ஊழியர் கொலை

ஆரல்வாய்மொழியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்தவர் வடசேரி கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ரதீஷ்குமார் (வயது 35). இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் நேற்றுமுன்தினம் படுகொலை செய்யப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் அவர் இருந்த போது மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷிபா (36), சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கத்தி, குத்தூசியால் குத்தி அவரை கொடூரமாக கொன்றார். ரதீஷ்குமார் உடலில் 30-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்தன. கொலை செய்து விட்டு ரத்தக்கறை படித்த நிலையில் நின்ற ஷிபாவை ஆரல்வாய்மொழி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

கள்ளக்காதலி கைது

ரதீஷ்குமாருக்கும், ஷிபாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளக்காதல் சில வருடங்கள் நீடித்துள்ளது. அப்போது உன்னுடைய கணவரை விவாகரத்து செய்தால், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஷிபாவிடம், ரதீஷ்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி அவரும் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

ஆனால் ஷிபாவை ஏமாற்றிய ரதிஷ்குமார், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் தன்னை ஏமாற்றிய ரதீஷ்குமாரை அவர் திட்டமிட்டு தீர்த்துக் கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷிபாவை கைது செய்தனர். இந்தநிலையில் ஷிபா பற்றி போலீஸ் விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

புதிய தகவல்

அதாவது கள்ளக்காதல் மோகத்தில் கணவனை வெறுத்த ஷிபா அவரை விவாகரத்து செய்ததோடு தனது குழந்தைகளின் மீதான பாசமும் குறைந்துள்ளது. இதனால் குழந்தைகளை அவருடைய கணவர் பராமரித்து வந்துள்ளார். மேலும் ஷிபா குடும்பத்தினரின் வெறுப்புக்கும் அவர் ஆளானதாக தெரிகிறது. அவருடைய தந்தை ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். வாழ்க்கையில் மகள் தடம் மாறி செல்கிறாளே என அவர் புலம்பி உள்ளார்.

இந்தநிலையில் தான் ரதீஷ்குமார் வேறொருவரை திருமணம் செய்தார். இதனை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஷிபா, 2 முறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. மேலும் அவருடைய மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. 8 வருடமாக வேலை பார்த்த பேராசிரியை பணியையும் அவரால் ஒழுங்காக மேற்கொள்ளவில்லை. எனவே வேலையையும் அவர் இழக்க நேரிட்டது. பின்னர் அவர் காப்பகத்தில் வசித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கள்ளக்காதல் மோகத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் கள்ளக்காதலனின் உதாசீன பேச்சு ஷிபாவை கொலைகாரியாக மாற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக ஷிபா போலீசிடம் வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.

சிறையில் அடைப்பு

இதனை தொடர்ந்து போலீசார் நேற்று மாலையில் பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story