நான்குவழிச்சாலை, பாலப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று நகை-பணம் வழிப்பறி; தாய்-மகள் உள்பட 3 பேர் கைது
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட தாய்-மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழவந்தான்,
மதுரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட தாய்-மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாய்-மகள்
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுடன் வாலிபர் மோட்டார் சைக்கிளில் வழிப்பறி செய்து வருவதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட சூப்பிரண்டு சிவப்பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படையினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 பெண்கள், ஒரு வாலிபர் என 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் விசாரணையில் அந்த பெண்கள் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சரோஜா(வயது 44), இவருடைய மகள் பிரவீனா(22) என்பதும், அந்த வாலிபர் நிலக்கோட்டையை சேர்ந்த தர்மர்(24) என்பதும் தெரியவந்தது.
3 பேர் கைது
இவர்கள் 3 பேரும் விக்கிரமங்கலம், சிந்துபட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று நகைபறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கடந்த மாதம் 14-ந் தேதி நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் துவரிமான் முதல் மேலக்கால் வைகை பாலம் வரை, சமயநல்லூர் நான்கு வழிச்சாலை, தேனூர் பாலம் முதல் மேலக்கால் பாலம் வரை, நகரி நான்கு வழி சாலை முதல் சோழவந்தான் ெரயில்வே கேட் வரை என பல்வேறு பகுதிகளில் இரவில் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து நகை, பணத்தை திருடி செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இரவு நேரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.