திருவாரூருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும்
திருக்குவளையில் இருந்த திருவாரூருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குவளையில் இருந்த திருவாரூருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களுக்கான இலவச பஸ்
பெண்களுக்கு இலவச பஸ் பயணம் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார்.
ஏழை, எளிய பெண்களுக்கு இந்த திட்டம் பேரூதவியாக அமைந்தது. இந்த திட்டம் வேலைக்குச் செல்லும் மகளிரால் கொண்டாடப்பட்டது.
மேலும் பல்வேறு விமர்சனங்களை தாண்டி, பெண்களுக்கான இலவச பஸ்களில் அடையாளம் காண பிங்க் நிறம் அடிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
பெரிதும் பயன்பட்டு வருகிறது
அவ்வாறு இயக்கப்படும் இந்த இலவச பஸ்கள் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான ஏழை பெண்களுக்கு பயன்பட்டு வருகிறது. குறிப்பாக துணிக்கடைகளில், சிறு நிறுவனங்களில், தூய்மைப் பணியாளர்களாக, கட்டிட வேலையில் சித்தாளாக பணிபுரியும் குறைந்த ஊதியம் வாங்கும் பெண்களுக்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
வேலைக்கு செல்லும் ஏழை பெண்கள், பஸ்சுக்காக கணவரின் பாக்கெட்டை எதிர்பார்க்கும் நிலை மாறியுள்ளது. இந்த நிலையில் திருக்குவளையில் இருந்து திருவாரூருக்கு பெண்களுக்கான இலவச பயண பஸ் இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்-அமைச்சர் சொந்த ஊரிலே செயல்படுத்தவில்லை
இதுகுறித்து திருக்குவளை அருகே ஏர்வைகாட்டை சேர்ந்த மரகதவள்ளி கூறுகையில், திருக்குவளை தாலுகா, மேலவாழக்கரை ஊராட்சி, ஏர்வைகாடு, கொளப்பாடு, கச்சனம், நால்ரோடு, மாவூர், மாங்குடி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் ஏராளமான பெண்கள், திருவாரூர் மார்க்கமாக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களுக்கு விவசாய கூலி வேலை உள்ளிட்டவைகளுக்கு சென்று வருகின்றனர்.
ஏழை, எளிய பெண்கள் நலனை கருத்தில் கொண்டு இயக்கப்படும் பெண்களுக்கான இலவச பஸ்சை ஏர்வைகாட்டிலிருந்து, திருக்குவளை வழியாக திருவாரூருக்கு இயக்க வேண்டும். முதல்-அமைச்சர் சொந்த ஊரிலேயே அவர் கொண்டு வந்த பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் நிறைவேற்றப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றார்.
பெயரவுக்கு இயக்கப்படுகிறது
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா கூறுகையில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பஸ்கள் ஒரு சில இடங்களில் மட்டும் தான் பெயரளவுக்கு இயக்கப்படுகிறது. திருக்குவளையில் இருந்து திருவாரூருக்கு பெண்களுக்கான இலவச பஸ் கிடையாது.
முதல்-அமைச்சர் சொந்த ஊரில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.திருக்குவளையில் இருந்து வலிவலம், சாட்டியக்குடி, மாவூர் வழியாக திருவாரூருக்கு பெண்களுக்கான இலவச பஸ் இயக்க வேண்டும். அதேபோல நிறுத்தப்பட்ட திருமண உதவித்தொகை, முதியோர், முதிர் கன்னி உதவித்தொகை ஆகியவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும். . ஏழை மக்களின் உரிமை நலத்திட்டங்களை பறிக்கக் கூடாது என்றார்.