அடிக்கடி பழுதாகும் மின்மாற்றியை அகற்ற வேண்டும்
கொள்ளிடம் அருகே அடிக்கடி பழுதாகும் மின்மாற்றியை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே அடிக்கடி பழுதாகும் மின்மாற்றியை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்மாற்றியில் தீப்பொறி
கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் இருந்து பழையாறு மீன்பிடி துறைமுகம் செல்லும் நெடுஞ்சாலையில் புதுப்பட்டினம் கடைவீதியில் மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பழமைவாய்ந்த இந்த மின் மாற்றியில் இருந்து அடிக்கடி தீப்பொறி பறந்து வருகிறது. மேலும் மழை மற்றும் அதிக காற்று வீசும் போது மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு விடுகிறது.
பொதுமக்கள் அச்சம்
அடிக்கடி இந்த மின்மாற்றியிலிருந்து தீப்பொறி வந்து கொண்டே இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் உயர்சேதம் ஏதும் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த மின்மாற்றி மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் முக்கிய இடத்திலும், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் இருப்பதாலும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் இந்த மின்மாற்றியை சுற்றி எந்த வித தடுப்புகளும் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் அடிக்கடி பழுதாகும் மின்மாற்றி அகற்றி, வேறு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.