கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை


கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை
x

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் கூலித்தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கொலை வழக்கு

புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 56). இதேபோல வடக்கு இம்மனாம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (44). நண்பர்களான இருவரும், மரம் அறுக்கும் கூலிவேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி பகலில் புதுக்கோட்டையில் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே ரவி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் மது குடிக்க பணம் தருமாறு சுந்தரம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, வேலைக்கு செல்ல வேண்டியது தானே? ஏன் வேலைக்கு செல்லவில்லை என சுந்தரத்திடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், ரவியின் சாதி பெயரை சொல்லி திட்டி தான் வைத்திருந்த அரிவாளால் ரவியை வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ரவி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மறுநாள் இறந்தார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரத்தை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராத தொகையை கொலையானவரின் குடும்பத்தினருக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குமார் ஆஜராகி வாதாடினார்.


Next Story