மலை ரெயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது
பலத்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.
குன்னூர்
பலத்த மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது.
மரம் விழுந்தது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூர் பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இரவிலும் மழை தொடர்ந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக நேற்று அதிகாலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு ரெயில் நிலையம் இடையே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் பல்சக்கரத்துடன் கூடிய தண்டவாளம் சேதமடைந்தது. இதற்கிடையே நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இதில் 170 பேர் பயணம் செய்தனர். பின்னர் ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகே மரம் விழுந்து கிடந்ததால், இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் தாமதம்
இதனால் அந்த ரெயில் நிலையத்தில் மலை ரெயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ராட்சத மர கிளைகளை ரெயில்வே ஊழியர்கள் மின் வாள் மூலம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன் பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக அங்கிருந்து மலை ரெயில் புறப்பட்டு, காலை 11.15 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் குன்னூரில் பரவலாக மழை பெய்ததால், குன்னூர்-கோத்தகிரி சாலை டாஸ்மாக் குடோன் அருகில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் முன்புறம் மரம் விழுந்ததால், லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது புழம்பட்டி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவரது வீட்டின் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.