அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க நாணயம் திருட்டு
அரசு பள்ளி ஆசிரியையிடம் ஒரு பவுன் தங்க நாணயம் திருட்டு.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குனியமுத்தூர்
கோவையை அடுத்த மதுக்கரையை சேர்ந்தவர் மாரப்பன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 57). இவர் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தங்க நாணயம் வாங்க கோவை காந்திபுரம் வந்தார். பின்னர் அவர் ஒரு நகைக்கடையில் ஒரு பவுன் தங்க நாணயம் வாங்கிவிட்டு அரசு பஸ்சில் மதுக்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அந்த பஸ் குனியமுத்தூர் அருகே சென்றபோது, அவருடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்த 40 வயதான பெண் ஒருவர், திடீரென்று தமிழ்ச்செல்வியிடம் உங்கள் பொருள் கீழே விழுந்து விட்டது என்று கூறி உள்ளார். உடனே அவர் கீழே குனிந்து அந்த பொருளை எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அவரின் அருகே இருந்த அந்த பெண்ணை காணவில்லை.
அத்துடன் அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பவுன் தங்க நாணயத்தையும் காணவில்லை. அதன் மதிப்பு ரூ.46 ஆயிரம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி, இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.