வீடு இடிக்கும் போது தங்க ஆபரணம், நாணயங்கள் கண்டெடுப்பு
காவேரிப்பாக்கம் அருகே தங்க ஆபரணம், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
காவேரிப்பாக்கம் அருகே தங்க ஆபரணம், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தங்க ஆபரணம், நாணயங்கள் கண்டெடுப்பு
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த சேரி கிராமத்தில் உள்ள தென்னாண்டை தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 42). இவருக்கு சொந்தமான வீடு சிதிலமடைந்து இருந்தது. இதனால் வீட்டை இடிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து வீட்டை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது வீட்டின் சுவரில் இருந்து ஆறு பட்டை கொண்ட தங்க முகப்பு செயினும் (300 கிராம்), வேறொரு சுவர் இடிக்கும் போது 17 நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி தாசில்தார் பாலசந்தர் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் மற்றும் அவரது அக்காள் சுந்தரி ஆகியோரிடம் விசாரித்தார்.
அப்போது வீட்டை இடிக்கும் போது நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கிடைத்தது உண்மைதான் என்று அவர்கள் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவற்றை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
கருவூலத்தில்...
முன்னதாக சீனிவாசன், தாசில்தாரிடம் அளித்த மனுவில், எனது தாயார் 1974-ம் ஆண்டு இந்த ஊருக்கு வந்தார். அவரிடம் அதிக நகைகள் இருந்தது. என் தந்தையின் முதல் மனைவியின் மகன் களுக்கு பயந்து சுவரில் மறைத்து வைத்திருந்தார். இது எங்கள் பாரம்பரிய நகையாகும். இதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது தாசில்தார், அவர்களிடம் இந்த நகை உங்களுடையது என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்கும் வரை அவைகள் அனைத்தும் அரக்கோணம் கருவூலத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.