கடலூரில்கல்லூரி மாணவியின் 'ஷூ'வில் புகுந்த நல்லபாம்பு :பிடிக்க முயன்றபோது படமெடுத்து ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது


கடலூரில்கல்லூரி மாணவியின் ஷூவில் புகுந்த நல்லபாம்பு :பிடிக்க முயன்றபோது படமெடுத்து ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கல்லூரி மாணவியின் 'ஷூ'வில் நல்லபாம்பு புகுந்தது. அதை பிடிக்க முயன்றபோது படமெடுத்து ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

கடலூர்


கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். 3 நாள் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் வெளியே கிடந்த அவரது 'ஷூ'வுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனே வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஷூவுக்குள் இருந்த பாம்பை விரட்டுவதற்கு அச்சமடைந்தனர்.

படமெடுத்து ஆடியது

பின்னர் அவர்கள், பாம்புபிடி வீரருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா, விரைந்து சென்று ஷூவில் இருந்த பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். அப்போது சீறிய பாம்பு படமெடுத்து ஆடியது. இதில் சுதாரித்துக் கொண்ட பாம்பு பிடி வீரர், லாவகமாக அந்த பாம்பை பிடித்தார். அது 2 அடி நீளமுடைய நல்லபாம்பு ஆகும். இதையடுத்து அந்த நல்லபாம்பை, பத்திரமாக மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டார். ஷூவுக்குள் பாம்பு புகுவதை மாணவி பார்த்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே மாணவியின் ஷூவில் பாம்பு புகுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அலட்சியம் வேண்டாம்

இதுகுறித்து பாம்பு பிடி வீரர் கூறுகையில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டம் இருக்குமாயின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. பொதுவாக குழந்தைகளின் ஷூ, பை முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு, அவர்களுக்கு அணிவிப்பது நல்லது.

இனி மழைக்காலம் என்பதால் பாம்புகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும். எனவே பெற்றோர்கள் அலட்சியமாக இருக்காமல் தினசரி குழந்தைகளின் காலணிகளை கவனித்து போட்டு விடவேண்டும் என்றார்.

1 More update

Next Story