லாரி மீது அரசு பஸ் மோதியது 6 பயணிகள் உடல் நசுங்கி பலி 9 பேர் படுகாயம்
அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அச்சரப்பாக்கம்,
சென்னை கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை அரசு பஸ் சிதம்பரம் நோக்கி சென்றது. காலை 8¼ மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே போலாம்மா குளம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.
முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் வேகமாக மோதியது. இதில் அரசு பஸ் அப்பளம் போல நொறுங்கியது.
6 பேர் சாவு
இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்தில் பலியானவர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 28), பண்ருட்டி சவுந்தர்யா, வெங்கடேசன் (38), சென்னை சைதாப்பேட்டை குரோஷா (23), மதுராந்தகத்தை சேர்ந்த ஏகாம்பரம் (50), உத்திரமேரூர் சுரேஷ் (21) என்பது தெரியவந்தது.
அரசு பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த குழந்தைகள் கீர்த்திகா, அவந்திகா, கிருத்திகா மற்றும் பண்ருட்டியை சேர்ந்த குமார் (21), பிரவீன் (23) உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து நடந்த பின் அரசு பஸ் டிரைவர் மற்றும் லாரி டிரைவர் தப்பிச்சென்று விட்டனர். விபத்து நடந்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், உதவி போலீஸ் சூப்பிரண்டும், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டுமான (பொறுப்பு) கிரண் ஸ்ருதி உள்பட பலர் ஆய்வு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி மற்றும் அரசு பஸ் கிரேன்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.