மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்


மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
x

களக்காட்டில் மின்கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து நேற்று அதிகாலை அரசு டவுன் பஸ் ஒன்று களக்காட்டிற்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் ரகு என்பவா் ஓட்டினார். களக்காடு பழைய பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு புதிய பஸ் நிலையம் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் கண்டக்டர் மற்றும் 5-க்கும் மேற்பட்ட பயணிகள் மட்டுேம இருந்தனர். அங்குள்ள டீக்கடை முன்பு சாலையின் இடது ஓரமாக மற்றொரு பஸ் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து டிரைவர் ரகு பஸ்சை வலது ஓரமாக ஓட்டி சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பஸ் மோதியது. இதில் மின்கம்பம் வளைந்தது. ஆனால் மின் கம்பிகள் அறுந்து விழவில்லை. இதையடுத்து பஸ்சில் இருந்த அனைவரும் அவசரமாக கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினர். இதுகுறித்து உடனடியாக களக்காடு மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்வினியோகத்தை துண்டித்தனர். பின்னர் அவர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் களக்காடு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story