சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியது; 5 பேர் காயம்
விராலிமலை அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் இறங்கியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
சாலையோர பள்ளம்
திருச்சியிலிருந்து மதுரைக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு விராலிமலை அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. விராலிமலை தாலுகா கசவனூர் அருகே சென்றபோது அதே திசையில் முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென எந்த ஒரு செய்கையுமின்றி இடதுபுறமாக லாரியை திருப்பியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அரசு பஸ் டிரைவர் லாரியில் மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
5 பேர் காயம்
இதில் பஸ்சில் இருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிச்சை (வயது 54). இவரது மனைவி அஞ்சம்மாள் (47) மற்றும் விருதுநகரை சேர்ந்த பாலாஜி (26) உள்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அனைவருக்கும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரையும் மீட்டு கொடும்பாளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மற்ற பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.