சேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து பெண் உள்பட 4 பேர் காயம்
சேலம் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சேலம் வழியாக திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 45 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் பரந்தாமன், அந்த பஸ்சை ஓட்டினார். சேலம் மாவட்டம் வீராணம் அருகே மஞ்சவாடி கணவாய் பகுதியில் நள்ளிரவு பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 2 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பஸ்சில் இருந்த பெண் உள்பட 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் வீராணம் போலீசார் அங்கு சென்று பஸ்சுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு மற்ற பயணிகளை ஏற்றி சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.