சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்
செந்துறை அருகே சாலையில் அரசு பஸ் பழுதாகி நின்றது.
நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு நத்தத்தில் இருந்து செந்துறை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நத்தம்-செந்துறை சாலையில் குட்டுப்பட்டி பகுதியில் பஸ் வந்த போது, அரசு பஸ் திடீரென பழுதாகி சாலையோரத்தில் நின்றது.
இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதையடுத்து பழுதான பஸ்சை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வந்து சரிசெய்து எடுத்துச்சென்றனர். நத்தம்-செந்துறை வழித்தடத்தில் பழைய பஸ்களை இயக்காமல் புதிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.