அரசு விரைவு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அண்ணாநகர் பஸ் பணிமனையில் அரசு விரைவு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.
அண்ணாநகர்,
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனை செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ் ஒன்று பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த பஸ்சில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து ஊழியர்கள், என்னவென்று பார்ப்பதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. இதனால் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற பஸ்களில் தீ பரவாமல் இருக்க அவை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், பஸ்சில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக பஸ் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என அண்ணா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பணிமனையில் இருக்கும் போது தீப்பிடித்து எரிந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகளை ஏற்றிச்செல்லும்போது தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவத்தால் அண்ணாநகர் பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.