அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அரசு நிதியில் சாலையா? - விதிகளை மீறிய அதிகாரிகள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது?- மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி
அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அரசு நிதியில் சாலை அமைக்கப்பட இருப்பதாக தொடர்ந்த வழக்கில், விதிகளை மீறிய அதிகாரிகள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக கேள்வி எழுப்பியது.
அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு அரசு நிதியில் சாலை அமைக்கப்பட இருப்பதாக தொடர்ந்த வழக்கில், விதிகளை மீறிய அதிகாரிகள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக கேள்வி எழுப்பியது.
அங்கீகாரம் பெறாத மனைகள்
சென்னையைச் சேர்ந்த வக்கீல் அருண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் யூனியன் உரப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் நிலத்தை வீட்டு மனைகளாக கடந்த 2009-ம் ஆண்டில் மாற்றினர். இதற்காக உரிய அங்கீகாரம் பெறவில்லை. அங்குள்ள மனைகளுக்கு உரிய சாலை வசதிகளை சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இந்தநிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அந்த வீட்டு மனைகளுக்கு இடையே சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உரப்பனூர் கிராமத்திற்கு போதிய சாலை வசதி இல்லை. ஆனால் தனியார் வீட்டுமனைகளுக்கு அரசு திட்டத்தின்கீழ் சாலை அமைப்பதை அந்த கிராம மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
தடுக்க வேண்டும்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, தனியார் நிலத்தின் வீட்டுமனைகளுக்கான சாலையானது, ஊராட்சிக்கு தானமாக வழங்கப்படாத நிலையில் அங்கு சாலை வசதி செய்வது ஏற்புடையதல்ல என்று புகார் அளித்தோம். ஆனால் எங்கள் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி நிதியில் சாலை அமைப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
சாலை அமைப்பதில் விதிமீறலா?
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் விவேக் பாரதி ஆஜராகி, அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் அடங்கிய நிலத்தில் அரசின் பொது நிதி மூலமாக சாலை அமைப்பது சட்டவிரோதம். உரிய நெறிமுறைகளை பின்பற்றாமல் சாலை அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள், என்று கூறி அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள், அங்கீகாரம் பெறாத மனைகளுக்கான சாலை வசதியை எந்த அடிப்படையில் பொது நிதியில் இருந்து ஏற்படுத்தி தருகிறார்கள்? விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரிகள் மீது ஏன் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்த நிலை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.