வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு
பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்து விட்டு தப்பி ஓடும் போது கிணற்றில் தவறி விழுந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்து விட்டு தப்பி ஓடும் போது கிணற்றில் தவறி விழுந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பள்ளி ஆசிரியை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரதீப். கார் மெக்கானிக். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது48). அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி 2 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு திடீரென்று மர்ம நபர்கள் 2 பேர் உள்ளே புகுந்தனர். அந்த சத்தம் கேட்டு மகாலட்சுமி, பிரதீப் ஆகியோர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் 2 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி மகாலட்சுமி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
நகை பறிக்க முயற்சி
ஆனால் அந்த நகையை பறிக்க விடாமல் ஆசிரியை மகாலட்சுமி, பிரதீப் ஆகியோர் கூச்சலிட்டபடி போராடியதாக தெரிகிறது. ஆனாலும் அந்த மர்ம கும்பல் விடாமல் மகாலட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தனர்.
அதை மகாலட்சுமி இறுக்கமாக பிடித்ததால் பாதிநகை மட்டும் அதாவது 3 பவுன் நகை மட்டும் அறுந்து மர்ம நபர்களின் கைக்கு சென்றது. மீதி 3 பவுன் நகை மகாலட்சுமியின் கையில் இருந்தது.
இதற்கிடையே ஆட்கள் வந்து விடுவார்கள் என்று பயந்த மர்ம நபர்கள் கையில் சிக்கிய 3 பவுன் நகையுடன் தப்பி ஓடினர்.
கிணற்றில் விழுந்தனர்
அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் வசிக்கும் வள்ளியம்மாள் என்பவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள் கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அங்கிருந்த சிலர் திரண்டு வந்து மர்ம நபர்களை விரட்ட தொடங்கினர்.
உடனே அவர்களிடம் இருந்து தப்பிக்க மர்ம நபர்கள் வேகமாக ஓடினார்கள். அப்போது அங்கு தரைமட்ட கிணறு இருப்பது தெரியாமல் மர்ம நபர்கள் 2 பேரும் கிணற்றில் தவறி விழுந்தனர். இதில் ஒரு நபர் மட்டும் கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்தார். அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டார். ஒரு நபர் மட்டும் கிணற்றுக்குள் தத்தளித்தபடி கிடந்தார்.
2 பேர் கைது
இது குறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் கயிறு கட்டிஇறங்கி மர்ம நபரை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்தநபர் கம்பத்தை சேர்ந்த ரமேஷ் என்ற அருண் முத்து (30) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குஞ்சிபாளையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நடந்து சென்ற நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ரமேஷின் கூட்டாளி என்பதும், அவர் கம்பத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








