4-வது மாடியில் இருந்து பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து சாவு


4-வது மாடியில் இருந்து பட்டம் விட்ட சிறுவன் தவறி  விழுந்து சாவு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:02 PM IST)
t-max-icont-min-icon

4-வது மாடியில் இருந்து பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து சாவு

கோயம்புத்தூர்

கோவை

பொங்கல் விடுமுறையில் 4-வது மாடியில் இருந்து பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து போலீசில் கூறியதாவது:-

பட்டம் விட்ட சிறுவன்

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த பிரபாகரன். இவரது மகன் சூரிய பிரபாகர் (வயது10). அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சிறுவன் சூரிய பிரபாகர் பொங்கல் விடுமுறையையொட்டி தங்களது அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் நின்று பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது காற்று வீசும் திசைக்கு ஏற்ப பட்டத்தை பறக்கவிடும் ஆசையில் அங்கும், இங்கும் பட்டம் பறந்த திசையை நோக்கி சென்றான்.

பரிதாப சாவு

அப்போது திடீரென நிலை தடுமாறி, மாடி பால்கனி சுவரில் இருந்து தவறி தரையில் விழுந்தான். இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை, அக்கம், பக்கத்தினர் உடனே மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சூரிய பிரபாகரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் அறிவுரை

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, மாடியில் நின்றபடி பட்டம் விடக்கூடாது. தரையில் சமவெளியில் நின்று யாருக்கும் இடையூறு இல்லாமல் பட்டம்விட வேண்டும். இதுபோன்று ஆபத்தான முறையில் பட்டம் விடக்கூடாது. பெற்றோரும் இதனை கண்காணித்து தடுக்க வேண்டும். அந்தந்த போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த போலீசார் இதுகுறித்து உரிய அறிவுரைகளை குடியிருப்போருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

----


Next Story