வாலிபரை, போலீசார் உதவியுடன் கரம்பிடித்த பட்டதாரி பெண்


வாலிபரை, போலீசார் உதவியுடன் கரம்பிடித்த பட்டதாரி பெண்
x

வாலிபரை, போலீசார் உதவியுடன் பட்டதாரி பெண் கரம்பிடித்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

காதல்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மகன் கரண்(வயது 22). இவர் சொந்தமாக ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரும், வீரசோழபுரம் காமராஜர் நகரை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் நந்தினியும்(19) கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். நந்தினி பட்டதாரி ஆவார்.

இந்நிலையில் கரண், நந்தினியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதை தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதையடுத்து நந்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கரணிடம் நந்தினி கூறியுள்ளார். மேலும் இதுபற்றி கரணின் குடும்பத்தினரிடமும் முறையிட்டுள்ளார். அப்போது அவர்கள் திருமணத்துக்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணம்

இது குறித்து நந்தினி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, இருவருடைய பெற்றோர்களையும் அழைத்து பேசி விசாரணை நடத்தினார். அப்போது கரண் குடும்பத்தினர், நந்தினியை, கரண் திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கரண் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், நந்தினியை திருமணம் செய்ய கரண் சம்மதம் தெரிவித்தார். மேலும் கரண் குடும்பத்தினரிடம் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து கரண், நந்தினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் இரு குடும்பத்தினர் ஒப்புதலோடு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த காதல் திருமண ஜோடிக்கு போலீசார் அறிவுரைகள் கூறி, நந்தினியின் பெற்றோரோடு அனுப்பி வைத்தனர்.


Next Story