போலீஸ்காரர் உள்பட 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பட்டதாரி பெண்


போலீஸ்காரர் உள்பட 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பட்டதாரி பெண்
x

ரூ.50 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு போலீஸ்காரர் உள்பட 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்,

கரூரை சேர்ந்தவர் சவுமியா என்கிற சபரி (வயது 28). பி.காம். பட்டதாரி. இவரது பெற்றோர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சவுமியா சிறுவயது முதலே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.

அவரது நடவடிக்கை பிடிக்காத அவருடைய பெற்றோர் மகளை கண்டித்து உள்ளனர். இதையடுத்து பெற்றோரை பிரிந்த சவுமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளார். அப்போது அவருக்கு ராஜேஷ் என்கிற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் உள்ளது. அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி பலரிடம் பணம் பெற்று உள்ளார். பின்னர் தனது கணவரிடம் அந்த பணத்தை பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றி உள்ளார்.

2-வது திருமணம்

இதுதொடர்பான புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் சவுமியாவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சவுமியா முதல் கணவரான போலீஸ்காரரை உதறி தள்ளிவிட்டு ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை 2-வது திருமணம் செய்துள்ளார்.

அவருடன் ஒரு சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்திய அவர் அவரையும் கழற்றி விட்டு 3-வதாக ஒருவரையும் மணந்துள்ளார். இதற்கிடையே ராமநாதபுரத்தில் இருந்து சொந்த மாவட்டமான கரூருக்கு வந்த சவுமியா அங்கும் தனது கைவரிசையை காட்ட தொடங்கினார். தான் ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தனக்கு நெருங்கிய உறவினர் என்ற தகவலையும் பலரிடம் கூறி நம்ப வைத்து, உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி ரூ.50 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியாவை பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

போலீசாரின் விசாரணையில், சவுமியா 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், அவர் எந்த வங்கியிலும் உதவி மேலாளராக பணிபுரியவில்லை எனவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினர் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சவுமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story