ஸ்ரீமுஷ்ணத்தில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீமுஷ்ணத்தில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் புஷ்பவன தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் பி.பி.ஏ. படித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் மணிகண்டன் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை வெங்கடேசனிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு வெங்கடேசன், நீ காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள், ஆனால் திருமணத்திற்கு நான் வருவேன் என எதிர்பார்க்காதே என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.