திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் பிரமாண்ட கட்டிடம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்று. திண்டுக்கல் மாவட்டத்தை மருத்துவத்துறையில் வளர்ச்சியடைய செய்யும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதற்காக ரூ.318 கோடி மதிப்பீட்டில், திண்டுக்கல்-நத்தம் ரோடு ஒடுக்கம் பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து கட்டிட பணிகள் நிறைவு பெற்றதும் மாணவர் சேர்க்கை தொடங்கியது. அங்கு தற்போது சுமார் 300 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.
புதுப்பொலிவு
பொதுவாக அரசு மருத்துவ கல்லூரியின் வளாகத்தில் தான் அதன் மருத்துவமனையும் செயல்படுவது வழக்கம். ஆனால் திண்டுக்கல்லை பொறுத்தவரை, ஏற்கனவே திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், மருத்துவமனை மட்டும் திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது. மருத்துவ மாணவர்கள் நாள்தோறும் இங்கு வந்து பயிற்சி எடுத்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காலியாக கிடந்த இடத்தில் நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கின. தற்போது அந்த கட்டிட பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த புதிய கட்டிடங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
5 மாடி கட்டிடம்
இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது:-
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் ரேடியோலாஜி பிரிவு செயல்படும். அதில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகள் அமைக்கப்படுகிறது. அதேபோல் ரத்த மாதிரிகள் எடுக்கும் இடம், அறுவை சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் குறித்த மருத்துவ கருவிகள் பிரிவு, நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை பதிவேடுகள் வைக்கும் அறை, அறுவை சிகிச்சை கருவிகளை சுத்தப்படுத்தும் இடம், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலாவது தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, 2 அறுவை சிகிச்சை அரங்குகள், 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 10 படுக்கைகள் கொண்ட தீவிர இருதய சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு
மேலும் எலும்பு முறிவுக்கான பொது மருத்துவ சிறப்பு பிரிவுகள் மற்றும் நரம்பு இருதய சிகிச்சை பிரிவு, ரத்த சேமிப்பு வங்கி, நிலைய மருத்துவ அலுவலர்களுக்கான தனி அறை, மருந்தகம், தலைமை மருத்துவர்களுக்கான 3 அறைகள், 3 பயிலரங்கங்கள், பிசியோதெரபி வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, துணை பேராசிரியர்களுக்கான அறை போன்றவை செயல்படும்.
அதேபோல் 2-வது தளத்தில் 3 அறுவை சிகிச்சை அரங்குகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு, குழந்தைகள் அறுவை சிகிச்சை சிறப்பு சிகிச்சை பிரிவு, 3 பயிலரங்கம், ஆய்வகம், கல்லூரி முதல்வர் அறை, கண்காணிப்பாளர் அறை, இவர்களுக்கான அலுவலகம், துணை மற்றும் இணை பேராசிரியர்கள் அறை போன்றவைகள் அமைக்கப்படும்.
3-வது தளத்தில் 90 படுக்கைகள் கொண்ட பொது சிகிச்சை பிரிவு, 60 படுக்கைகள் கொண்ட எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, 20 படுக்கைகள் கொண்ட காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவு, 15 படுக்கைகள் கொண்ட தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு, 20 படுக்கைகள் கொண்ட தோல் சிகிச்சை பிரிவு, தோல் எலும்பு பல் அறுவை சிகிச்சைக்கான பயிலரங்கம் போன்றவை செயல்படும்.
1,401 படுக்கைகள்
4-வது தளத்தில் 150 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சை பிரிவு, 30 படுக்கைகள் கொண்ட கண் சிகிச்சை பிரிவு, 4 பயிலரங்கம், 30 படுக்கைகள் கொண்ட முதல்வர் காப்பீட்டு திட்ட சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்படும்.
அதேபோல் 5-வது தளத்தில் 8 அறுவை சிகிச்சை அரங்குகள், 30 படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பகுதி, மயக்க மருந்து துறை பயிலரங்கம், 150 மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பறை, 150 பேர் அமரக்கூடிய அளவிலான கூட்ட அரங்கம், 10 படுக்கைகள் கொண்ட கட்டண சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இதுதவிர அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடங்களில் மருத்துவ சிகிச்சைகள் தொடங்கும் போது 1,401 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகவும், தமிழ்நாட்டில் 20-வது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விளங்கும் என்றார்.