கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்


கோவை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்
x

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக கோவைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக கோவைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து 24-ந் தேதி காலையில் கோவை ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதையடுத்து மாலை பொள்ளாச்சியில் நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில், மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 26-ந் தேதி மாலை கோவை வந்து, விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். கோவைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழி நெடுங்கிலும் சிறப்பான உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

பிரமாண்ட வரவேற்பு

கோவை மாவட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவு இடங்களை பிடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றோம். தொடர்ந்து கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வோடு மனப்பூர்வமாக பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார். சென்னைக்கு அடுத்ததாக பிற மாவட்டங்களை விட பெரிய அளவில் முதல்-அமைச்சரின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2 லட்சம் பேர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.பி. நாகராஜன், வால்பாறை நகர செயலாளர் சுதாகர் மற்றும் பகுதி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story