ஆரோக்கியமான சமுதாயம் படைக்க முடியும்


ஆரோக்கியமான சமுதாயம் படைக்க முடியும்
x

அரசு திட்டங்களை முறையாக பயன்படுத்தினால் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க முடியும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

கிராமசபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி, கொண்டம்பல்லி கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

ஆரோக்கியமான சமுதாயம்

இந்தப் பகுதியில் கழிவுநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அடிப்படை வசதி இல்லாதது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுங்கள். அரசு திட்டங்களை முறையாக பயன் படுத்தினால் 100 சதவீதம் சிறந்த குடிமக்களாக, ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க முடியும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாத்கர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சரியான ஆசிரியர்கள் இல்லை. உடற் கல்வி ஆசிரியர் மாதத்திற்கு 4 நாள்தான் பள்ளிக்கு வருகிறார். கழிவறை மாணவர்களை வைத்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சத்துணவு வேறு இடத்தில் சமைக்கப்பட்டு இங்கு எடுத்து வரப்படுகிறது. பள்ளியிலேயே சமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒரே நபரிடம் 47 வீட்டுமனை பட்டா

ஒரே நபரிடம் 47 வீட்டு மனை பட்டாக்கள் உள்ளது. இது குறித்து கேட்டால் தன்னுடையது என்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாராயம் விற்றவர்கள் சிலர் மனம் திருந்தி தற்போது ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆனால் அவர்களை சாராய வியாபாரிகள் தொந்தரவு செய்கிறார்கள் என்றனர்.

இதற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பதிலளித்து பேசியதாவது:-

சாத்கர் அரசு உயர்நிலைப்பள்ளி சம்மந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் சப்- கலெக்டர் வெங்கட்ராமனை அழைத்து 47 பட்டாக்கள் வைத்திருக்கும் நபரிடம் விசாரணை நடத்துமாறும், வீடு இல்லாதவர்களுக்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து வழங்குமாறும், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை அழைத்து சாராய தொழிலில் ஈடுபடாமல் மாற்று தொழில் புரிவர்கள் குறித்து விவரம் சேகரித்து மாற்று தொழில் புரிய கடனுதவி வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட பொறியாளர் செந்தில், சப்- கலெக்டர் வெங்கட்ராமன், வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுப்ரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, பேரணாம்பட்டு தாசில்தார் சுரேஷ்குமார், பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், துணை தலைவர் லலிதா டேவிட், ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, எழிலரசி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், சாத்கர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீத பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்திரகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சாவித்திரி ரவி, செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story