மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம்


மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது மண்டல தலைவர் வெளிநடப்பு செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது மண்டல தலைவர் வெளிநடப்பு செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சி கவுன்சிலர்களின் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேயர்-மண்டல தலைவர் வாக்குவாதம்

கூட்டம் தொடங்கியதும், கோவை வ.உ.சி. மைதானத்தில் தனியார் பொருட்காட்சி நடத்த குறிப்பிட்ட நபருக்கு அனுமதிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள். அதற்கு மேயர் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்றும், அமைச்சரிடம் கலந்தாலோசனை செய்த பின்னரே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இதையடுத்து மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மேயரை பார்த்து, நான் நிறைவேற்றும் தீர்மானத்தை நீங்கள் அங்கீகரிப்பது இல்லை என்று கூறினார். அதற்கு மேயர், நீங்கள் தான் என்னை குறித்து தவறாக சொல்லி வருகிறீர்கள் என்றார். இதனால் மேயருக்கும்-மண்டல தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெளிநடப்பு செய்ய முயற்சி

இதை தொடர்ந்து மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும், தாங்கள் கொண்டு வந்த கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கும்படி கூறினாலும் மேயர் அதை நிறைவேற்றவில்லை. இதனால் மிகவும் கோபம் அடைந்த மண்டல தலைவர் மீனாலோகு, நான் மேயரின் இந்த செயலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்று ஆவேசத்துடன் கூறி வெளிநடப்பு செய்ய முயன்றார்.

இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து மண்டல தலைவரை சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

பிரபாகரன் (அ.தி.மு.க.):- மாநகர பகுதியில் பணிகள் மந்தமாக நடக்கிறது. முக்கிய தீர்மானங்கள் எல்லாம் மேயரே முடிவு செய்துவிட்டு கடமைக்காகதான் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கொண்டு வருகிறார் என்று கூறினார். இதனால் மேயருக்கும், கவுன்சிலர் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேகத்தடை

அழகு ஜெயபால் (காங்கிரஸ்):- ஆர்.எஸ்.புரம் சர் சண்முகம் சாலையில் குப்பை மறுசுழற்சி மையத்தில் போதிய உபகரணங்கள் வழங்க வேண்டும். பசுக்களை பராமரிக்க கோசாலை இருப்பதுபோன்று 100 வார்டுகளிலும் தெருநாய்கள் பராமரிக்கும் மையத்தை அமைக்க வேண்டும். ஆர்.எஸ்.புரம் பகுதியில் முறிந்து விழும் நிலையில் இருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். 100 வார்டுகளிலும் தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.):- குண்டும், குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டும். நாங்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு குறைகளை கூறும்போது நடவடிக்கை எடுப்பது இல்லை.

சித்ரா தங்கவேல் (ம.தி.மு.க.):- எனது வார்டுக்கு குப்பை லாரிகள் வருவது இல்லை. இதனால் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. எனவே உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெருநாய்கள் தொல்லை

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசும்போது, தெருநாய்கள், மாடுகள், குதிரைகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே அதன் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.அதற்கு சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் பேசும்போது, கால்நடைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் ஆணையாளர் பிரதாப் பேசும்போது, சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது மற்றும் பராமரிப்பு பணியை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. இதற்காக நாம் மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அதை மாநகராட்சியே செய்தால் மாதத்துக்கு ரூ.4 கோடி வரை செலவு மிச்சமாகும். அதை செய்ய உள்ளோம் என்றார்.


Next Story